“பொய்… பொய்… அவர் கூறுவது முழுமையான பொய்…”

புதுடில்லி:
என் சம்மதத்துடன் உறவு வைத்திருந்ததாக அக்பர் கூறியுள்ளது முழு பொய். பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பல்லவி கோகோய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த, பா.ஜ.,வின், எம்.ஜே., அக்பர். இவர் ‘ஏஷியன் ஏஜ்’ உட்பட பத்திரிகைகளின் ஆசிரியராக அக்பர் இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பல பெண் பத்திரிகையாளர்கள் ‘மீடூ’ என்ற பெயரில் புகார்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள, என்.பி.ஆர்., எனப்படும், தேசிய பொது ரேடியோ என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பல்லவி கோகோய், தன்னை பலாத்காரம் செய்ததாக, அக்பர் மீது குற்றம்சாட்டி ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதிஉள்ளார்.

ஆனால் இதை அக்பரும், அவருடைய மனைவி மல்லிகாவும் மறுத்துள்ளனர். பரஸ்பரம் முழு ஒப்புதலுடன், பல்லவியுடன் உறவு வைத்திருந்ததாக அக்பர் தெரிவித்து உள்ளார். இதை பல்லவி கோகோய் மறுத்துள்ளார். இதுகுறித்து சமூக தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:

என் சம்மதத்துடன் உறவு வைத்திருந்ததாக அக்பர் கூறியுள்ளது முழு பொய். பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். என் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். நான் உண்மையை தொடர்ந்து பேசுவேன். இதன் மூலம், மற்ற பெண்களுக்கும் தைரியம் வந்து இத்தகைய கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!