மகனைப் பெற்ற தன்பாலின ஈர்ப்பாளர்

தன்பாலின ஈர்ப்பாளர் (Gay) ஒருவர், வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த மகனைச் சிங்கப்பூரில் முறைப்படி தத்தெடுக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நவீன காலத்துக்கு ஏற்ப சிங்கப்பூர் தன்னை புதுப்பித்துக் கொண்டாலும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அங்கு சட்டபூர்வ அனுமதி இல்லை. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கும் சிங்கப்பூரில் இடமில்லை. இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளரான ஆண் ஒருவர், குழந்தை பெற விரும்பினார்.

இதனால் அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற முடிவு செய்தார். 2 லட்சம் டாலர்களுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது சிறுவனுக்கு ஐந்து வயது ஆகிறது.

பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படாத 46 வயதான மருத்துவரான தன்பாலின ஈர்ப்பாளர் தன் மகனை சிங்கப்பூர் அழைத்து வந்தார். முறைப்படி தத்தெடுக்க அனுமதி கோரினார். ஆனால் மாவட்ட நீதிபதி அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இதனால் அவர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்

தத்தெடுப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிறுவனின் நலனுக்காக அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், ‘இந்த தீர்ப்பு இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும்’ எனவும் ‘இதுமாதிரியான செயல்களுக்கான பொதுவான அனுமதியாகக் கருதக்கூடாது’ என்றும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!