மகரவிளக்கு கால பூஜை… இன்று மாலை சபரிமலையில் நடை திறப்பு

சபரிமலை:
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்பட உள்ளது. ஜன., 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மண்டல பூஜை முடிந்து கடந்த 27-ம் தேதி இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

பின்னர் மகரவிளக்கு காலத்துக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன. தேவையான பொருட்கள் அனைத்தும் டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. சுற்றுப்புறங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மகரவிளக்கு கால பூஜைகளுக்காக இன்று மாலை, நடை திறக்கப்பட உள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின் மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைப்பார்.

ஜன., 18 வரை நெய் அபிஷேகம் நடைபெறும். மகரஜோதி தரிசனம், ஜன., 14-ம் தேதி நடைபெறுகிறது. அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள், 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படுகின்றன. மண்டல காலத்தின் கடைசி நாட்களில் பெண்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

மகரவிளக்கு காலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போவதில்லை என போலீசார் முடிவெடுத்து உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!