மகாத்மா பிறந்த நாள்… ரயில்களில் தேசியக் கொடி படம் இடம் பெறுகிறது

புதுடில்லி:
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அனைத்து ரயில்களிலும் தூய்மை இந்தியா திட்ட லோகோ மற்றும் தேசியக் கொடி படங்கள் இடம் பெற உள்ளன.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்களில் உள்ள பெட்டிகளிலும், ‘துாய்மை இந்தியா’ திட்ட, ‘லோகோ’வும், தேசியக் கொடி படமும் இடம் பெறவுள்ளன.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகங்கள் கூறியதாவது:

மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை, வரும், செப்., 15 முதல், அக்., 2 வரை, இந்திய ரயில்வே கொண்டாடுகிறது. இதையொட்டி, ரயில்வேயின் அனைத்து ரயில்களில் உள்ள பெட்டிகளிலும், துாய்மை இந்தியா திட்ட லோகோவும், தேசியக் கொடி படமும் இடம் பெறும்.

மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய, 43 ரயில்வே ஸ்டேஷன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. டில்லி, லக்னோ, மும்பை, சூரத், தனபூர், அஸன்ஸோல், பெங்களூரு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள், இதில் அடங்கும். இந்த ஸ்டேஷன்களில், மகாத்மா காந்தியை நினைவுப்படுத்தும் வகையிலான ஓவியங்கள் வரையப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த, 28 ரயில்வே ஸ்டேஷன்களில் துாய்மை திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த பட்டியலில், புரி, அமிர்தசரஸ், ஹரித்துவார், குருஷேத்ரா ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.வரும் அக்டோபர் முதல், அடுத்த ஆறு மாதங்களில், துாய்மை, அகிம்சை, தன்னார்வ சமூக சேவை, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, பெண்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்தல் போன்ற விஷயங்களை வலியுறுத்தும் வகையில், ரயில்வே ஸ்டேஷன்களில் ஓவியங்கள் வரையும்படி, மண்டல ரயில்வேக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!