மக்கும் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிப்பு… நகராட்சி ஆணையர் தகவல்

கரூர்:
நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுகிறது… தயாரிக்கப்படுகிறது என்று கரூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மக்கும் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுகிறது என்று கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் தெரிவித்தார்.
கரூர் நகராட்சியில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவது குறித்து கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறியதாவது:-

கரூர் நகராட்சி பகுதியில் உள்ள 48 வார்டுகளிலும் மக்கும், மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள் என தனிதனியாக சேகரிக்கப்படும் குப்பைகள் கரூர் வாங்கல் ரோட்டிலுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இங்கிருந்து பெறப்படும் காய்கறிகள், பழங்கள், ஓட்டலிலுள்ள எச்சில் இலைகள் உள்ளிட்ட மக்கும் தன்மையுள்ள குப்பைகள் நகராட்சி பகுதியில் உள்ள இரண்டு நுண்ணுயிர் உரமாக்குதல் மையத்தில் சேகரிக்கப்பட்டு நுண்ணுயிர் உரமாக்கப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 2 மெட்ரிக் டன் முதல் 5 மெட்ரிக் டன் திடக்கழிவு வரை நுண்ணுயிர் உரமாக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்த முடியாமல் உள்ள பொருட்களை குப்பை தொட்டியில் சேர்க்காமல் தாங்களாகவே வீட்டுக்கு வீடு நுண்ணுயிர் உரமாக்கும் பேரல்கள் அமைத்து அவற்றில் சேகரித்தால் கரூர் நகராட்சியை புதுமையான நகராட்சியாக மாற்ற முடியும்.

முதற்கட்டமாக கரூர் நகராட்சி பகுதியில் 20 பேருக்கு தங்களின் வீடுகளில் பயன்படுத்துமாறு உபகரணங்கள் வழங்கப்பட்டு பரீட்சார்த்தமாக நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி பகுதியில் திருமண மண்டபம் வைத்திருப்பவர்கள் மற்றும் பொது திருவிழா காலங்களில் உருவாகும் கழிவுகளை கொண்டு அவர்களே தங்களின் சொந்த இடத்திலேயே உரமாக்கி கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சேகரித்து பிளாஸ்டிக் மேலாண்மை திட்டம் மூலம் அதனை அரைத்து சிமெண்டு நிறுவனங்களுக்கு மூலப்பொருளாகவும், சாலை அமைக்கும் பணிக்கும் பயன்படுத்த அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே வீடுகள், தொழில் நிறுவனங்களில் இருந்து குப்பைகளை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். மாறாக ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று கொட்டி சுகாதார சீர்கேட்டை விளைவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!