மதுரை ஆதீனத்தின் சொத்து ஆக்கிரமிப்பு… பழனியில் மக்கள் அதிர்ச்சி
பழனி:
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழனியில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளவற்றை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி ஆதீனங்களுக்கு சொந்தமான மடங்கள், சத்திரங்கள், தர்மகூடங்கள், சமுதாய மடங்கள் என பழனி அடிவாரம் மற்றும் நகரை சுற்றிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்கள் அனைத்தும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை ஆகும். இவற்றில் பெரும்பாலான சொத்துக்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்க திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் பழனி அடிவாரத்தில் உள்ள 3332 சதுரடி அளவு கொண்ட இடம் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த இடத்தை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடம் என்பதும், சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை சட்டவிரோதமாக 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 1969ம் ஆண்டு அப்போதைய ஆதீனம் மேற்கொண்ட முயற்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதும் தெரியவந்தது.
தற்பொழுது அந்த இடத்தை மீட்க மதுரை ஆதீனம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை மீட்கவும், ஆதீனம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை செய்யவும் திருத்தொண்டர் பேரவை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி