மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் (Michelle Bachelet) தெரிவித்த கருத்திற்கு இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரான மிச்செல் பச்லெட், கடந்த திங்கட்கிழமை, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் உரை நிகழ்த்தியுள்ளார்.

மனித உரிமை மீறல் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து வெளிப்படையான விவாதமும் தீவிரமான ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் உலகிலுள்ள மக்களுக்கு கிடைக்கும் நீதி காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் இதன்போது மிச்செல் வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமான 39 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவர் ராஜீவ் சந்தர், கடுமையான சவால்களை இந்த அமைப்பு எதிர்கொண்டு வருவதாகவும் பயங்கரவாதம் தான் மனித உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய அத்துமீறலாக இருந்து வருவதாகவும் நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒற்றுமையையும் கருத்தில்கொண்டு மனித உரிமை மீறல் பிரச்சினைகளை வெளிப்படையான முறையில் தீர்த்துவைக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு மிச்செல் உரை நிகழ்த்துவார் என நம்புவதாகவும்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!