மனித சிறுநீரைக் கொண்டு செங்கல் தயாரிப்பு

மனித சிறுநீரைக் கொண்டு செங்கல் தயாரிக்கும் முறையை தென் ஆப்ரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

கட்டுமானப் பணிகளுக்காக செங்கற்கள் தயாரிக்க நிறைய களிமண் அல்லது கான்கிரீட் தேவைப்படுகிறது. ஆகவே இயற்கை முறையில் அந்த செங்கற்களை தயாரிப்பது குறித்து தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் ஆலோசித்துள்ளனர். கேப்டவுனில் உள்ள அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓரு ஆசிரியை வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அவர்கள் சென்ற வருடம் யூரியா மற்றும் மணலைக் கொண்டு செங்கற்கள் செய்யலாம் என கண்டுபிடித்தனர். இதற்காக செயற்கை முறையில் தயாரிக்கபட்ட யூரியா வை உபயோகித்து வந்துள்ளனர். அப்போது மாணவர்களில் ஒருவர் மனித சிறுநீரில் ஏராளமான யுரியா உள்ளதால் அதை ஏன் பயன்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார். ஆசிரியை அதை ஆமோதிக்கவே பரிசோதனைகள் தொடங்கப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் மனித சிறுநீரை கொண்டு முதல் செங்கல் தயாரிக்கப்பட்டது. இந்த செங்கல்லை தயாரிக்க சுமார் 30 லிட்டர் மனித சிறுநீர் தேவைப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக ஆண்கள் கழிப்பறையில் இருந்து ஒரு சிறப்பு குழாய் மூலம் சிறுநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீர் தேவையை குறைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Sharing is caring!