மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி… தமிழக கவர்னர் மற்றும் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

சென்னை:
இன்று அதிகாலை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு தற்போது ரத்த அழுத்தம் சீராக உள்ளது’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
கோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இதுவரை காவேரி மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் தனது சொந்த காரில் கருணாநிதி சென்ற நிலையில், முதன் முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்றார்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால், அதிகாலை 1.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், அவரது ரத்த அழுத்தம் சீரானது. கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28 ம் தேதி ) காலையில் ஸ்டாலின், கனிமொழி, செல்வி, துரைமுருகன், அன்பழகன், அழகிரி, ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். 10 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதி உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

காங்., மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர் பிரபு ஆகியோர் வந்தனர். ஆடிட்டர் குருமூர்த்தி நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் பெரும் தலைவர். இவர் நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் கூறுகையில்: கருணாநிதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளா். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் நலம் குறித்து கேட்டேன். மருத்துவர்களிடமும் கேட்டறிந்தேன். அவரது உடல் நிலை நலமாக உள்ளது. தேறி வருகிறது என்ற தகவல் மகிழச்சி அளிக்கிறது. சோனியா, ராகுல் ஆகியோர் விசாரித்த தகவலையும் அவர்களிடம் தெரிவித்தேன் என்றார்.

மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி மகள் கனிமொழி, கருணாநிதி நலமாக உள்ளார், ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கருணாநிதி பிறவி போராளி. மீண்டும் அவர் நிச்சயமாக போராடி, வேகமாக நல்ல உடல்நலத்திற்கு திரும்புவார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!