மழை நீருடன் தூர்வாரப்படாமல் இருந்த கழிவுநீரும் கலந்து தெருக்களில் ஓடியது

தமிழகம் முழுவதும் நேற்று இரவு மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அவ்வாறு கனமழை பெய்த இடங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். வெகுநாட்களாக ராமேஸ்வரம் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர் வாரபடாமல் இருந்துள்ளது.

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இடியுடன் கூடிய பலத்ஹ மழை பெய்தது. பெருக்கெடுத்து ஓடிய மழை நீருடன் தூர்வாரப்படாமல் இருந்த கழிவுநீரும் கலந்து தெருக்களில் ஓடியது. ஊரெங்கும் கழிவு நீர் நிரம்பி கடும் துர்நாற்றமும் வீசியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ராமேஸ்வரம் நகரில் உள்ள ராமநாதசாமி கோவிலை சுற்றி உள்ள வடக்கு மற்றும் கிழக்கு சன்னிதி தெருக்களில் கழிவு நீருடன் கலந்த மழை நீர் கோவில் கிழக்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. அங்கிருந்த பக்தர்கள் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தண்ணீர் தொடர்ந்து உள்ளே புகுந்த வண்ணம் இருந்தது. அதனால் பக்தர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ராமேஸ்வரம் கோவிலில் இது போல தண்ணிர் புகும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதாகவும் அரசு மற்றும் கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் ஊர் மக்கள் கூறி உள்ளனர்.

Sharing is caring!