மாலைதீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

மாலைதீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யாமின் மீண்டும் போட்டியிடுவதுடன் அவரை எதிர்த்து இப்ராஹிம் மொஹமட் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், மாலைதீவு தலைநகரிலுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் இப்றாஹிம் மொஹமட்டின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகம் நேற்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இலஞ்சம் வழங்கியமை மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காக எதிர்க்கட்சி தலைமையகம் சுற்றிவளைக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மவ்மூன் அப்துல் கயூம் பதவி விலகியதுடன் அதனை தொடர்ந்து முதற் தடவையாக பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக மாலைதீவில் நிலவிவருகின்ற அரசியல் நெருக்கடி கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அப்துல்லா யாமின் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தியதை அடுத்து மீண்டும் வலுப்பெற்றது.

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் 2,60,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Sharing is caring!