மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஒப்புக்கொண்டுள்ளார்

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்ததை, அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

மாலைதீவு மக்கள் தமக்கு தேவையானதை தெரிவு செய்துள்ளனர். நேற்றைய தேர்தலின் முடிவுகளை நான் ஏற்றுக்றொள்கிறேன் என, ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார்.

அத்துடன் புதிதாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, இப்ராஹிம் மொகமட் சோலியைச் சந்தித்து அவருடைய வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அப்துல்லா யாமீன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டில் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட அரசியல் நெருக்கடிக்கான அச்சம் குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இறுதியாக 2013 இல் மாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஐ அப்துல்லா யாமீன் குற்றஞ்சாட்டியதால், அந்தத் தேர்தல் முடிவுகளை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கூட்டணிகளை வௌியேற்றி தனித்துப் போட்டியிட, அப்துல்லா யாமீனுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட, இரண்டாவது வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாகியதை சர்வதேச ஊடகங்கள் நினைவுபடுத்தியுள்ளன.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

தமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக, ஜனநாயக ரீதியாக குரலெழுப்பிய அனைத்து மாலைதீவு மக்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இன்று வெளியான மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் படி மாலைத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் மொஹமட் சோலி வெற்றிபெற்றார்.

மொஹமட் இப்ராஹிம் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 616 வாக்குகளை பெற்றதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல்லா (G)கயூம் 96 ஆயிரத்து 132 வாக்குகளைப் பெற்றார்.

உத்தியோகபூர்வ முடிவுகள் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன.

வாக்களிக்க தகுதிப்பெற்ற 2 இலட்சத்து 62 ஆயிரத்து 135 வாக்காளர்களில், 2 இலட்சத்து 33 ஆயிரத்து 877 பேர் வாக்களித்திருந்தனர்.

இது 89 தசம் 22 வீத வாக்களிப்பாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!