மும்பை-கோவா இடையே வரும் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்

மும்பை-கோவா இடையே வரும் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை சுற்றுலாவை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மும்பையில் இருந்து கோவாவிற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது: மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

இக்கப்பலில் 500 பேர் பயணம் செய்ய முடியும்.அதோடு மும்பையில் இரண்டு மிதக்கும் ரெஸ்டாரண்ட்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கப்பலை வாங்க இந்திய ஷிப்பிங் கார்ப்பரேசனுக்கு 800 கோடியை மத்திய அரசு வழங்கும். அனைத்து துறைமுகத்திலும் பயணிகள் கப்பல் டெர்மினஸ் கட்டும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே நாட்டில் 10 நீர்வழிச்சாலைகள் இருக்கிறது. 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை ஒழிக்கும் திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். அதிகரித்து வரும் வாகன மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மும்பையில் ஏற்கனவே பாந்த்ராவில் ஒரு மிதக்கும் ரெஸ்டாரன்ட் இருக்கிறது. அது சமீபத்தில் கன மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதற்குள் மீட்பு படையினர் கப்பலை மீட்டனர்.

Sharing is caring!