மும்பை சிறை வீடியோ இன்று ஆய்வு

விஜய் மல்லையாவை அடைக்க உள்ள சிறை குறித்த வீடியோவை இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்ட்ர் நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது.

இங்கிலாந்துடன் இந்தியாவுக்கு கடந்த 1993 ஆம் வருடம் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறு நாடு கடத்தப்படும் நபர்களின் மனித உரிமை மீறாமல் இருக்க நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டி உள்ளது. இந்திய சிறைகளில் போதிய வசதிகள் இல்லாததால் இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கைகள் இங்கிலந்து நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தவில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு பயந்து அவர் நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பக் கோரி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்தியா வந்தால் தம்மை அடைப்பதாக உள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என விஜய் மல்லையா தெரிவித்தார். இந்திய அரசு இதனை மறுத்தது. எனவே கடந்த 31 ஆம் தேதி நீதிமன்றம் இந்திய அரசை இந்த சிறைச்சாலை குறித்த வீடியோவை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி சிறைச்சலையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ளது. இந்த வீடியோவை இன்று லண்டன் நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் இதுவே கடைசி விசாரணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Sharing is caring!