மூன்று நாள்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இந்திய கடற்படை அதிகாரி

மூன்று நாள்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இந்திய கடற்படை அதிகாரியான அபிலாஷ் டோமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அபிலாஷ் டோமி

கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர படகில் உலகைச் சுற்றி வரும் பாரம்பர்ய போட்டியில் இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி கலந்துகொண்டார். சுமார் 30,000 மைல் தூரம் கடலில் பயணிக்கும் இந்தப் போட்டியில் 10,000 மைல்களுக்கு மேல் பயணித்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அவரது படகு விபத்தில் சிக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்.வி.துரியா படகில் அவர் பயணம் மேற்கொண்டார்.

போட்டியின் 84 வது நாளில் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 3,500 கி.மீ தூரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது கடும் காற்று மற்றும் மழை காரணாமாக இந்த விபத்து நடந்தது. அப்போது நடுக்கடலில் சுமார் 14 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்த விபத்தில் அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன், நடுக்கடலில் மோசமான வானிலையில், சேதமான படகில், தனிநபராக மூன்று நாள்கள் போராடினார். மோசமான வானிலை காரணமான அவர் இருக்கும் பகுதிக்குச் செல்ல முடியாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள் திணறின.

விமானம் மூலமும் மீட்க முடியாத நிலையில் 3 வது நாள் பிரான்ஸ் படகு ஒன்று அவரை மீட்டது. தற்போது அவர் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.இந்நிலையில் அபிலாஷ் டோமி கூறியதை மேற்கோள்காட்டியுள்ள இந்திய கடற்படை, “கடல் நம்பமுடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. நானும் எனது துரியாவும் (படகு) இயற்கையை எதிர்த்து கடுமையாகப் போராடினோம்.

கடலில் பயணிக்கும் திறனும் என்னுள் இருக்கும் வீரனும், நான் தாக்குப்பிடிக்க முக்கிய காரணம். மேலும், கடற்படையில் எடுத்த பயிற்சிகளும் முக்கிய காரணம். இந்திய கடற்படைக்கும் என்னைக் காப்பாற்றியவர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். போட்டியில் 84 வது நாளில் 1,500 மைல் தூரம் கடந்த அபிலாஷ், அப்போது 3 வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!