மெக்ஸிக்கோவுடனான எல்லையில் 5,200க்கும் அதிக அமெரிக்கப் படையினர்

மெக்ஸிக்கோவுடனான எல்லைக்கு 5,200க்கும் அதிக அமெரிக்கப் படையினரை பென்டகன் அனுப்புகின்றது.

இந்த நடவடிக்கையின்போது, டெக்சாஸ், அரிஸோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்களின் மீதே கவனம் செலுத்தப்படுவதாக ஜெனரல் டெரென்ஸ் ஓஷொக்னெஸ்ஸி (Terrence O’Shaughnessy) தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மெக்ஸிகோ எல்லையில் ஏற்கனவே 2,100 தேசிய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து, மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்காவை நோக்கி பெருமளவிலான குடியேற்றவாசிகள் முன்னேறி வருகின்றனர்.

எதிர்வரும் 6ஆம் திகதி அமெரிக்க இடைத்தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், குடியேற்றவாசிகளினுடைய அதிகரித்த வருகை பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

தேர்தலில் குடியேற்றவாசிகளினுடைய வருகை தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்கும் அவர்களினுடைய சட்டவிரோத வருகையைத் தடுப்பதற்குமே இவ்வாறு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sharing is caring!