யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் – பண்டத்தரிப்பில் இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை கிராம மட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் 54 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று (03) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று 21 ஆவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கண்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அல்லது புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sharing is caring!