யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் நிறைவேறியது
இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
கடந்த 1948 மே 14-ம் தேதி இஸ்ரேல் நாடு உருவானது. அப்போது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், “மதம், இனம், பாலின பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக, அரசியல் உரிமைகள் அளிக்கப்படும். மத, மொழி சுதந்திரம் பாதுகாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலில் 85.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 74.5 சதவீதம் பேர் யூதர்கள். 20.9 சதவீதம் பேர் பாலஸ்தீனர்கள். இதர இனங்களைச் சேர்ந்தவர்கள் 4.6 சதவீதம் பேர். மதரீதியாக 74.7 சதவீத யூதர்கள், 17.7 சதவீத முஸ்லிம்கள், 2 சதவீத கிறிஸ்தவர்கள் அங்கு வசிக்கிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
இந்த சட்டத்துக்கு ஆதரவாக 62 எம்.பிக்கள் வாக்களித்தனர். 55 பேர் எதிராக வாக்களித்தனர். இந்த சட்டத்தில், ஒன்றிணைந்த ஜெருசலேம் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் ஹீப்ரு மொழிக்கு மட்டுமே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. அரபு மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தின் மூலம் இஸ்ரேலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,“இஸ்ரேல், யூதர்களின் நாடு என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.