ரன்வேயின் இறங்கும் போது தரையை உரசிய விமானத்தின் இறக்கை

திருச்சி:
ரன்வேயின் ஒரு பக்கம் ஸ்ரீலங்கா விமான இறக்கை உரசிக் கொண்டே இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் விமான விபத்துக்கள் மற்றும் பரபரப்பு சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஏர்இந்தியா விமானம் சுற்றுச்சுவரை இடித்து சென்ற சம்பவம் பயணிகளால் மறக்க முடியாத ஒன்று.

இந்நிலையில் நேற்று இலங்கையில் இருந்து வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்தில் இருந்து தப்பி உள்ளது.

நேற்று காலை கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தனர். 9.25 மணிக்கு அந்த விமானம் தரையிறங்க வேண்டும். விமானம் வந்தபோது வானிலை மோசமாக இருந்தது.

பைலட்க்கு ஓடுதளம் சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் விமானி விமானத்தை தரையிறக்கி உள்ளார். அப்போது விமானம் ஒரே பக்கமாக சாய்ந்தபடி இறங்கியது. இதனால் விமானத்தின் இடது இறக்கை தரையில் உரசியபடி விமானம் தாழ்வாக சென்றது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

இதையடுத்து சுதாரித்த பைலட் விமானத்தை மேலே எழுப்பினார். மீண்டும் கொழும்புக்கு விமானம் திரும்பிச் சென்றது. வானிலை சீரானதையடுத்து காலை 11 மணிக்கு மீண்டும் அந்த விமானம் திருச்சிக்கு வந்து பத்திரமாக தரையிறங்கியது.

இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!