ரஷ்ய வழக்கறிஞரை மகன் சந்தித்தது உண்மை…டிரம்ப் ஒப்பதல்

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்து ஹிலாரிக்கு எதிரான தகவல்களை பெற்றது உண்மை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம்  ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு எதிராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிக்காக ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஹிலாரி கிளிண்டனை தோல்வியடைய செய்ய அவருக்கு எதிரான தகவல்களை பெருவதற்காக ட்ரம்ப் டவரில் ரஷ்ய பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் சந்தித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை ட்ரம்ப் தரப்பு இதுவரை மறுத்து வந்தது.

இதனிடையே அமெரிக்க புலனாய்வுத துறை இதன் விசாரணையை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் ட்ரம்ப் இது குறித்து தனது ட்வீட்டில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”எனது மகன் சட்ட ரீதியிலான அபாயத்தில் இருப்பதை நினைத்து தான் வருந்துவதாக வெளியான செய்திகள் முழுக்க கற்பனையானது. தேர்தலில் எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியை பற்றிய தகவலை அடுத்தவர்களிடம் பெறுவது சட்டப்பூர்வமான ஒன்று தான். அரசியலில் எல்லா நேரங்களில் இது போன்று நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து எனக்கு வேறு எதுவும் தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் சட்ட ரீதியிலான சிக்கலில் சிக்கியிருப்பதை நினைத்து அதிபர் ட்ரம்ப் கவலையில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ட்ரம்ப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!