ரீயூனியன் தீவுக்கு செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது

இலங்கையின் மேற்கு கடல் பகுதியான நீர்கொழும்பிலிருந்து ரீயூனியன் தீவுக்கு செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 11 அன்று நீர்கொழும்பிலிருந்து 40 நாட்டிகல் மைல் தூரத்தில் சுற்றிவளைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்கு செல்ல முயன்றுள்ளனர். இந்த தீவுப்பகுதி இந்திய பெருங்கடலில் அமைந்திருந்தாலும் பிரான்ஸ் நிர்வகிக்கும் பகுதியாக இருந்து வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 89 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். இவர்கள் மட்டகளப்பு, தொடுவா, உடப்பு, சிலாபம், மன்னார், அம்பாறை, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட அனைவரும் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் இந்த நிலைமையை மனதில் கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை நம்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதே போல், கடந்த மே மாதம் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 131 இலங்கையர்கள் சுற்றிவளைக்கப்பட்டு மலேசிய படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இலங்கையைச் சேர்ந்த மக்கள் படகு வழியாக நாட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்கள் குறைந்து வருவதாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மிக முக்கியமான இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளது.

Sharing is caring!