வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அழிக்க அமெரிக்கா திட்டம்

வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

கொரிய போருக்குப் பிறகு அந் நாடு வடகொரியா தென் கொரியா என இரண்டு நாடுகளாக உடைந்தது. அமெரிக்க ஆதரவுடன் தென்கொரியா முதலாளித்துவ நாடாகவும், சோவியத் யூனியன் உதவியுடன் வடகொரியா கம்யூனிச நாடாகவும் செயல்பட்டு வந்தன. சோவியத் யூனியன் உடைந்த பிறகு, சீனாவுடன் வடகொரியா நெருக்கம் காட்டி வருகிறது.

இதற்கிடையே இரு கொரிய நாடுகளுக்கும் இடையே கடும்பகை நிலவுகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதால், அமெரிக்காவையும் வடகொரியா பகை நாடாக கருதியது.

அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உருவாக்கிய வடகொரியா அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியது. வடகொரியா மிரட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடியாக எச்சரிக்கை விடுத்துவந்தார்.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் சமரசம் ஏற்படுத்த சீனா முயற்சித்தது. தென்கொரியாவும் இதற்கு ஒப்புக்கொண்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு நடந்தது. அதன்படி சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் ஜூன் 12 ஆம் தேதி சந்தித்து பேசினார்கள். அப்போது டிரம்ப்-கிம்ஜாங்உன் இடையே சமரச ஒப்பந்தம் உருவானது. அதில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் உன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

ஆனால், வடகொரியா அணு ஆயுத ஆராய்ச்சிகளை கைவிடவில்லை என்று “38 நார்த்” என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது

இந்த நிலையில் வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த வருட இறுதிக்குள் அழிக்கும் பணியை அமெரிக்கா முன்னின்று செய்யும் என்று டொனால்டு டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் இந்த திட்டம் தொடர்பாக, வடகொரியாவிடம் விரைவில் அமெரிக்க தூதரக அதிகரி மைக் பொம்பே ஆலோசனை நடத்துவார் எனவும், இதன்மூலம் வடகொரியாவுக்கு எதிரான தடைகளை ரத்து செய்வது விரைவில் நடக்கும் எனவும் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!