வடகொரியாவில் தொடர்ந்தும் அணுவாயுத செயற்திட்டம்

வட கொரியா தனது அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்தவில்லை எனவும் ஐ.நா.வின் தடைகளை மீறுவதாகவும் ஐ. நா. பாதுகாப்புப் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், அதிகரித்த சட்டவிரோத கப்பல் மூலமான எண்ணெய்ப் பரிமாற்றங்களும் வௌிநாடுகளுக்கான ஆயுத விற்பனை முயற்சிகளும் வட கொரியாவினால் மேற்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சர்ச்சைக்குரிய அறிக்கையானது சுயாதீன வல்லுநர்கள் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டு, ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் நேற்று (03) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பில் வட கொரியா கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

புதிய அணுவாயுத நடவடிக்கையில் பியோங்யாங் ஈடுபடுவதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

செய்மதிப் புகைப்படங்களின் அடிப்படையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கும் வட கொரிய தலைவருக்கும் இடையில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது, கொரிய பிராந்தியத்தை அணுவாயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதில் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!