வடகொரியா ஏவுகணை கூடத்தை அகற்றுகிறதா?…சந்தேகம்
தனது ஏவுகணை சோதனை மையத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் வடகொரியா, இரு நாட்டுக்கும் பொதுவான நிபுணர்களின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்ன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன் வெளியான புகைப்படங்களில், வடகொரியாவின் முக்கிய ஏவுகணை தளமான சோஹே அகற்றப்படுவதாக தெரிய வந்தது. சிங்கப்பூரில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அதிபர் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில், ஏவுகணை சோதனைக் கூடங்கள் அகற்றப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்பேயோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை சுட்டிக் காட்டினார். மேலும், வடகொரியாவின் இந்த செயலை மேற்பார்வையிட ஐநா போன்ற பொது நிபுணர் குழுவை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வடகொரியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனை கூடங்களை அகற்ற வடகொரியா ட்ரம்பிடம் வாக்குறுதி அளித்தாலும், அதை மேற்பார்வையிட எந்த வழியும் இல்லாதது போல ஒப்பந்தம் அமைந்தது. இதனால், வடகொரியா, இந்த ஏவுகணை கூடத்தை வேறு இடத்தில் நிச்சயம் நிறுவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.