வருவாரா? அவர் வருவாரா? மும்பை கோர்ட்டில் ஆஜராக வருவாரா?

மும்பை:
விஜய் மல்லையா இன்று மும்பை கோர்ட்டில் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய, தொழிலதிபர் விஜய் மல்லையா, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், இன்று நடக்கும் விசாரணையில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் துவங்க, நாட்டின் பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அதை திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பியோடினார்.

அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. தலைமறைவாக இருக்கும் குற்றவாளி என்ற முத்திரையை மல்லையா மீது சுமத்துவதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

சி.பி.ஐ.,யும், மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மல்லையா, தன்னை நாடு கடத்த இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எம்.எஸ்.ஆஸ்மி முன், மல்லையா தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில், மல்லையா ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா மனு தாக்கல் செய்து உள்ளதால், மும்பை நீதிமன்றத்தில், இன்று அவர் ஆஜராக மாட்டார் எனத் தெரிகிறது. அதேசமயம், இந்த வழக்கில், பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தன் தரப்பு வாதத்தை, மல்லையா முன் வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அவரே ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!