வழி விடாமல் சென்றதால் ஆத்திரம்… தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
ஒரத்தநாடு:
வழிவிடாமல் சென்றதால் ஆத்திரமடைந்து தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஒரத்தநாடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சை கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த அய்யப்பன் ஓட்டி சென்றுள்ளார். நெய்வாசல் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றுள்ளது.
லோடு ஆட்டோவில் மீன் ஏற்றி கொண்டு நெய்வாசல் மேலத்தெருவை சேர்ந்த பிரபாகரனும், அவரது தம்பியும் சென்றனர். தனியார் பஸ் வழிவிடாமல் சென்றதால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்ற போது அதனை முந்தி சென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்துள்ளனர். இதனால் பஸ் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் லோடு ஆட்டோ டிரைவர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது தம்பியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வழிவிடாத ஆத்திரத்தில் தனியார் பஸ் கண்ணாடி மீது கல்வீசப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தி யுள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி