வாஜ்பாய் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.

சிறுநீரகத் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக அவர் டெல்லியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்ததாக டெல்லி தனியார் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தது.

1924 டிசம்பர் 25 ஆம் திகதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தார்.

வௌ்ளையனே வௌியேறு போராட்டத்தில் இணைந்ததன் மூலம் அவரின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது.

50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், பாரதிய ஜனதாக் கூட்டணி சார்பாக 3 முறை பிரதமராக பதவி வகித்தார்.

ஐக்கிய நாடுகளவையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அவர் பாரத ரத்னா விருது பெற்றவராவார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் நடிகர்களும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான அட்டல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தனது தலைமகனை இழந்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரின் மறைவையொட்டி 7 நாட்கள் அரச முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுவதுடன், எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியிலுள்ள விஜய்காட் பகுதியில் நாளை மாலை 5 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

Sharing is caring!