வாய்க்கால் சரியாக தூர்வாரலை… பள்ளியை சுற்றி வளைத்த தண்ணீர்
மயிலாடுதுறை:
வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாததால் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே சித்தமல்லியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் 70 பேரும், மாணவிகள் 40 பேரும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ராஜன் வாய்க்கால் மூலம் சித்தமல்லியில் உள்ள படுகை வாய்க்காலுக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் சித்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சூழ்ந்தது.
முழங்கால் அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பள்ளியை சுற்றிலும் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் நின்றதால் பள்ளி ‘தீவு ’போல் காணப்பட்டது. தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன், பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
பள்ளி முன்பு தேங்கிய தண்ணீர் அகற்றி விட்டு, வாய்க்காலை தூர்வார முழுமையாக தூர்வார பொதுப்பணி துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி- பத்மா மகன், திருச்சி