விடுதலைப்புலிகளுடன் இராமசாமிக்கு தொடர்பு…மலேசிய தமிழர்கள் துணை வேண்டும்

பினாங்கு மாநிலத் துணை முதல்வர், முனைவர் ப.இராமசாமிக்கு, மலேசியத் தமிழர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இராமசாமிக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாக்கிர் நாயக் விவகாரத்திலும் இவர் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அவருக்கு ஆதரவாக நிற்பது அவசியமாகும் என்று ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.சரவணன் தெரிவித்தார்.

“இராமசாமி, மொழி – இன உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தயங்காதவர். அவ்வகையில் தமிழீழ மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பதை மறுப்பதற்கில்லை” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சரவணன் கூறியுள்ளார்.

பாலஸ்தீனம் போன்று தமிழீழத்திலும் அமைதி மலர வேண்டும். மக்கள் மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதே அவரது தலையாய நோக்கமேயன்றி தீவிரவாதத்திற்கு துணை போவது அவரது நோக்கமல்ல.

எனவே, இத்தகைய தருணங்களில் தமிழர்கள் தங்களுக்கிடையே உள்ள அரசியல் கொள்கை வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட வேண்டும் என சரவணன் மலேசியத் தமிழர்களை வலியுறுத்தியுள்ளார்.

Sharing is caring!