விநோத புகார்…அணில் விடாமல் துரத்தியது…

ஜெர்மனியில் அணில் துரத்தியதற்கு பயந்த நபர் ஒருவர் போலீசாருக்கு போன் செய்து உதவி கேட்ட விநோத சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனியில் கார்ல்ஷுரேவில் அணில் தன்னை துரத்துவதாகவும் விரைந்து காப்பாற்றும்படியும் காவல் துறை அவசர தொலைபேசிக்கு  அழைப்பு வந்தது. மிகவும்  ஆபத்தான நிலையில் அந்த நபர் பேசுவதை உணர்ந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்தனர்.

சம்பவ இடத்தில் உண்மையிலேயே இளைஞர் ஒருவரை அணில் குட்டி துரத்துவதை கண்டனர். போலீசார் முயன்றும் தடுக்க முடியவில்லை. பின்னர், சிறிது நேரத்தில் அந்த அணில் குட்டி, சோர்வடைந்து துரத்துவதை விட்டுவிட்டது. அதோடு திடீரென தூங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக அணில் குட்டியை போலீசார் பிடித்தனர். தூங்கிய பிறகு தான், அணில் குட்டியை பிடித்தோம் என ஜெர்மனி போலீசார் கிண்டலாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

மீட்ட அணில் குட்டிக்கு காவல் துறையினர் கார்ல்- ப்ரீட்ரிச் என பெயரிட்டுள்ளனர். தற்போது, அது செல்லப் பிராணிகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அணில் துரத்துவதர்கெல்லாம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் என இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது கேலிக்கு உரிய விஷயமில்லை என்று ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுவாக அணில்கள் தனித்து வாழும் நிலையில்  அவை இவ்வாறு மூர்க்கமாக நடந்துகொல்லம் என்றும் உணவு அல்லது உதவி தேவைப்படும்போது அணில்கள் மனிதரை துரத்தும் என்றும் கூறப்படுகிறது.

தங்களின் தாயை இழந்துவிட்ட அணில் குட்டிகள் தாய்க்கு மாற்றாக மனிதரிடம் தங்களின் கவனத்தை திருப்பலாம் என்று ஜெர்மனி காவல்துறை செய்தித  தொடர்பாளர் கிறிஸ்டினா கிரென்ஸ் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!