விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இந்திய இளைஞனுக்கு சிறை தண்டனை

சிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதாக இந்திய இளைஞர் கூறி உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து பாலிக்கு சிங்கப்பூர் வழியாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 31 வயதான பெண் ஒருவர் ஜன்னல் ஓர இருக்கையில் உறங்கியபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அவர் அருகில் அமர்ந்திருந்த இந்திய இளைஞரான ரவிச்சந்திரன் விக்னேஷ் என்னும் இளைஞர் தனது வலது மார்பகத்தை அழுத்துவதைக் கண்டு அவர் கூச்சலிட்டார். அவர் கையை எடுத்து விட்டு தூங்குவது போல் நடித்துள்ளார். விமான குழுவினர் அந்தப் பெண்ணை வேறொரு இருக்கையில் அமர்த்தி உள்ளனர். இளம்பெண் இது குறித்து சிங்கப்பூர் விமான காவல்துறை அதிகாரியிடமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன மேலாளரிடமும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாருக்கிணங்க ரவிச்சந்திரனை சிங்கப்பூர் காவல்துறையினர் அக்டோபர் நான்காம் தேதி கைது செய்து வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உடனடியாக தப்ப முடியாத நிலையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த தன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட குற்றவாளிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக் கொண்டார்.

அதை ஒட்டி ரவிச்சந்திரன், “சிங்கப்பூரின் சட்டத்தின் படி இவ்வாறு நடந்துக் கொள்வது தவறு என எனக்கு தெரியாது. நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். என்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். என்னை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி விடுங்கள்.

இனி நான் வெளிநாட்டு பயணம் செய்யவே மாட்டேன். இந்த ஒரு பெண்ணையும் தொட மாட்டேன். இது போல தவறை நான் இந்தியாவில் செய்தது இல்லை. நான் மது போதையில் அவ்வாறு நடந்துக் கொண்டேன். நான் சிங்கப்பூருக்கு வரவே மாட்டேன்” என கெஞ்சினார்.

அவரது விளக்கத்தை ஏற்காத நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

Sharing is caring!