வெப்பநிலை அதிகரிப்பு குறித்து பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு அறிக்கையில் உடன்பாடு இல்லை

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமக்கு உடன்பாடு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களின் நடவடிக்கைகள் காரணம் அல்ல எனவும் ட்ரம்ப் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைத் தாக்கிய மைக்கேல் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், தற்போது வெப்பநிலை வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது என்றபோதிலும், இது மனிதர்களால் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல கோடி டொலர்களை செலவிடவோ, 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை இழக்கவோ தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் வெப்பநிலை 3 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துவருவதாக பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன், உயரும் வெப்பநிலையைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையும் குறித்த அறிக்கையில் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.

அதேநேரம், உலகில் பெரும்பான்மை நாடுகள் பங்கேற்றிருக்கும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வௌியேறியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நிலக்கரி பயன்பாட்டைக் கைவிடவேண்டும் எனவும் 70 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் எரிபொருள் உற்பத்திக்கான பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் நினைவுகூரத்தக்கது.

 

Sharing is caring!