வெளிநாட்டினரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை எனவும் கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டவர்கள் நடத்திவரும் கடைகளுக்குள் நுழையும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களைத் திருடியும், கடையை சேதப்படுத்தியும் செல்கின்றனர். மேலும், கடை உரிமையாளர்களை கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விடுகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 640 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Sharing is caring!