வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தினருக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வேலை
மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தினருக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் கண்மாய், குளங்கள் துார் வாரல், ரோடு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இத்திட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தடுப்பணைகள் கட்டவும், பண்ணை குட்டைகள் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது. இந்த நிதியாண்டிலிருந்து இத்திட்டத்தில் விவசாயிகளின் வயல்களில் வரப்புகளை சீரமைத்து கொடுக்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அம்ரித், செயற்பொறியாளர் செல்வராஜ் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி ஒரு கி.மீ., துாரத்திற்கு வரப்புகளை சீரமைக்க 1.16 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நில ஆவணசான்றுகளை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு உறுதி திட்ட வேலையாட்கள் மூலம் அவர்கள் வயல்களில் வரப்புகள் சீரமைத்து கொடுக்கப்படும். இந்தாண்டு 350 கி.மீ., துாரத்திற்கு வரப்புகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கலெக்டர் அம்ரித் கூறியதாவது: மழை காலங்களில் தண்ணீர் தேக்க ஏதுவாக கேபியான், ஸ்டோன், கான்கிரீட் என மூன்று வகை தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. உசிலம்பட்டி, சேடப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் 50 தடுப்பணைகள் கட்டப்பட்டன. தற்போது பெய்த மழையில் சில தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பதிவு செய்த விவசாயிகளின் வயல்களில் வரப்புகள் சீரமைத்து கொடுக்கப்படுகிறது, என்றார்.