ஸ்டெர்லைட் 2 மாதத்தில் திறக்கப்படும்… சிஇஓ பேட்டியால் பரபரப்பு

சென்னை:
இன்னும் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.

இதில் சமீபத்தில் தீர்ப்பளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 3 வாரத்தில் அனுமதி தரவேண்டும் என்றும் கூறியது.  இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் சென்னையில் அளித்த பேட்டி:

இன்னும் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மேலும் அப்பகுதியில் 100 கோடி செலவில் சமூக நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும். பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற எங்களுக்கு கால அவகாசம் உள்ளது என்றார்.

தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!