ஹெலிகாப்டர் ஊழலில் இடைத் தரகராக செயல்பட்ட மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டார்

புதுடில்லி:
ஹெலிகாப்டர் ஊழலில் இடைத் தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.

வி.வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்த ஊழல் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட, கிறிஸ்டியன் மைக்கேலை, துபாயிலிருந்து நாடு கடத்த, அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர் டில்லி கொண்டு வரப்பட்டார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்களுக்கான, ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காங்., தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, முக்கிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட, கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள, துபாய்க்கு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த அனுமதி கோரி, மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து மைக்கேல் சார்பில் அந்நாட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மனுவை கோர்ட் நிராகரித்தது.

இதையடுத்து மைக்கேலை நாடு கடத்த அனுமதி அளித்து, துபாய் அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து துபாயிலிருந்து விமானம் மூலம் அவர் நேற்று இரவு (டிச.4) டில்லி கொண்டு வரப்பட்டார். டில்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை கைது செய்து சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!