166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மெக்சிகோவில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதன் காரணமாக கொலைகள் நடந்திருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மெக்சிகோ போலீசார் கூறுகையில், “ பாதுகாப்பு காரணங்களுக்காக உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தற்போது குறிப்பிட முடியாது. பல வருடங்களாக வொராகர்ஸ் மாகாணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட உடல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது “ என்று கூறினர்.

குவியலாக கண்டெடுக்கப்பட்ட உடல்களுடன் ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கிடைத்துள்ளதாக மெக்சிகோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மொக்சிகோ அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தும் பகுதியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தொழில் முறையில் போட்டிகளும், அதிக கொலைகளும் நடப்பது சாதாரமாகவே இருந்து வருகிறது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை போதை பொருள் கடத்தல் காரணமாக சுமார் 2 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 28,702 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 37ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!