18 நாளில் 21 சிங்கங்கள் இறந்தன… வனத்துறை அதிர்ச்சி

புதுடில்லி:
18 நாளில் 21 சிங்கங்கள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2015ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குஜராத்தின் கிர் வனப்பகுதியில் 201 பெண் சிங்கங்கள் உள்ளிட்ட 523 சிங்கங்கள் இருந்தன. கடந்த செப்., 12 முதல் செப்., 19 வரை 11 சிங்கங்கள் இறந்து கிடந்தன. இந்நிலையில், செப்.,20 முதல் 30 வரை ஒன்றன் பின் ஒன்றாக மேலும் 10 சிங்கங்கள் இறந்து கிடந்துள்ளன.

18 நாளில் 21 சிங்கங்கள் இறந்தது வனத்துறை அதிகாரிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டை, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக சிங்கங்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வனப்பகுதியில் இருந்து 31 சிங்கங்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், எந்த பகுதியிலும் சிங்கம் இறக்கவில்லை. சமர்தி பகுதியில் 31 சிங்கங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தனியிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!