2 வாரம் ஆச்சு… இன்னும் தண்ணீர் வரலை… விவசாயிகள் மறியல்

தஞ்சாவூர்:
2 வாரம் முடிந்த நிலையிலும் கடைமடைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர் அணையிலில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு, தண்ணீர் திறந்து 16 நாட்களாகின்றன. இருப்பினும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி உட்பட கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

இதை கண்டித்து, பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் முறையாக, கால்வாய்களை தூர்வாரி பராமரிக்காததால், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு, தண்ணீர் வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘இதே நிலை நீடித்தால், இந்த ஆண்டும், தண்ணீர் இருந்தும், சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். ‘உடனடியாக நடவடிக்கை எடுத்து, கல்லணை கால்வாயில், முழு கொள்ளளவு நீர் செல்ல வழி செய்ய வேண்டும்’ என, விவசாயிகள் கோஷமிட்டனர்.

இதேபோல், குருவிகரம்பை பகுதியில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி தாசில்தார், பொதுப்பணி துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ‘தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்’ என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. மறியலில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!