2013 வெள்ளத்தில் பிரிந்தார்… 2018ல் குடும்பத்துடன் இணைந்தார்

டேராடூன்:
வெள்ளத்தின் போது பிரிந்த குடும்பத்தை 5 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து சேர்ந்துள்ளார் இளம் பெண்.

2013 ம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தின் போது குடும்பத்தை பிரிந்த 17 வயது பெண், 5 ஆண்டுகளுக்கு பிறகு தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். 2013 ம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 700 பேர் உயிரிழந்தனர்.

3886 பேர் தற்போது வரை தேடப்பட்டு வருகின்றனர்.அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் தான் சன்சல் (17). இவர், வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது தனது பெற்றோருடன் கேதார்நாத் கோயிலுக்கு சென்றுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய சன்சல் குடும்பத்தை பிரிந்தார். இந்த வெள்ளத்தில் சன்சலின் தந்தை ராஜேஷ் உயிரிழந்தார். தாய் ஷீமா தனியாக வசித்து வருகிறார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சன்சல் 2014 ம் ஆண்டு முதல் ஜம்முவில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.

பாதியளவு பார்வை குறைபாடுடைய சன்சல், மனநலம் பாதிக்கப்பட்டவர். பல ஆண்டுகளாக நடத்திய முயற்சிக்கு பிறகு அலிகரில் உள்ள பன்னா தேவி போலீசார் மூலம் சன்சல் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். இதுகுறித்து சன்சலின் உறவினர் கூறியதாவது:

ராஜேஷ் மற்றும் ஷீமா 11 ஆண்டுகளுக்கு முன்பே அலிகரில் இருந்து சென்று காசியாபாத்தில் குடியேறி விட்டனர். அதற்கு பின் அவர்கள் அலிகர் வரவில்லை. இந்த துயர சம்பவத்திற்கு பின் ஷீமா தனியாக அலிகர் திரும்பி வந்தார். எங்களை தொடர்பு கொள்ளவில்லை. சன்சல் எங்கள் குடும்பத்தில் ஒருவர்.

ஆனால் மனநலம் சரியில்லாமல் இருப்பதால் எங்களால் பராமரிக்க முடியவில்லை. 17 வயது பெண்ணை இந்த நிலையில் பராமரிப்பது சிரமம். நாங்கள் ஏழ்மையான குடும்பம். எனது குடும்பத்தில் 9 பேர் உள்ளனர். அவர்களை நான் மட்டுமே கவனிக்க முடியும். குழந்தைகள் நல காப்பகமும் ஏதாவது பிரச்னை என்றால் தாங்களே சன்சலை பார்த்து கொள்வதாக கூறி உள்ளனர் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!