2400 வருடங்கள் பழைமை வாய்ந்த பண்டைய கிரேக்க கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கருங்கடல் பிரதேசத்தில் பல்கேரிய நாட்டின்  ஆழ்கடல் பகுதியில் இருந்து 2400 வருடங்கள் பழைமை வாய்ந்த பண்டைய கிரேக்க கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் 23 அடி நீளமானது எனவும், உலகில் நீரில் மூழ்கிய கப்பல்களில் மிகப் பழைமை வாய்ந்த கப்பல் இதுவெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் சுக்கானம் மற்றும் ஆசனங்கள் என்பன அப்பயே அழியாத நிலையில் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவையான பி.பி.சி. அறிவித்துள்ளது.

அது தனியான உலகம் போன்று காணப்படுவதாகவும், கடலுக்கு அடியில் செலுத்தப்பட்ட கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குழுவிலுள்ள ஹெலன் பாஃ தெரிவித்துள்ளார்.

கி.மு. 400 வருடங்களுக்கு முற்பட்ட காலத்திற்குரிய இக்கப்பல் நீருக்கடியில் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் நீரில் ஒக்சிசன் இல்லாமல் இருப்பதே ஆகும் என நம்பப்படுகின்றது. சுழியோடிகளுக்குக் கூட நெருங்க முடியாத அளவு 2000 மீட்டர் ஆழமான கடல் பரப்பில் இது  காணப்படுவதும் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்குள் செலுத்தக் கூடிய சுழியோடி ரெபோக்கள் மூலம் இந்த கப்பல் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அச்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!