300 முதலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொன்று குவித்த சம்பவம்
இந்தோனேசியாவில் உள்ள முதலை பண்ணையில் இருந்த சுமார் 300 முதலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொன்று குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில், தனது கால்நடைகளுக்காக புல் சேகரித்துக்கொண்டிருந்த 48 வயது நபர், அந்தப் பகுதியிலிருந்த முதலைப் பண்ணைக்குள் தவறி வீழ்ந்தார். அதையடுத்து, அங்கிருந்த முதலைகளில் ஒன்று, அவரது காலில் கடித்ததுடன் வாலால் ஓங்கி அடித்ததில் அவர் உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த ஊர் மக்கள் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன், அந்தப் பண்ணைக்கு சென்று நூற்றுக்கணக்கான முதலைகளைக் கொன்று குவித்தனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தும் கோபம் அடங்காத அந்தக் கும்பல், முதலைகளைக் கொன்றதாக பண்ணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முதலைகள் கொல்லப்படும்போது வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு இருந்தாலும், அவர்களைவிட கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால், அவர்களைத் தடுக்க முடியவில்லை என பண்ணை அதிகாரிகள்
மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.