3200 ஆண்டுகள் பழைமையான சீஸ் எகிப்தில் கண்டுபிடிப்பு

உலகின் மிகவும் பழமையான சீஸ் துண்டை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் எகிப்து சவப்பெட்டியிலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 3200 ஆண்டுகள் பழமையான சீஸ் துண்டை கண்டுபிடித்துள்ளனர். உலகின் மிகவும் பழமையான சீஸ் துண்டு இது என இத்தாலியின் கட்டானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் கி.மு.13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டஹ்மீஸ் என்ற மேயரின் பிரமிடில் நடத்திய ஆய்வின் போது, உடைந்துபோன ஜாடி ஒன்று எடுக்கப்பட்டது. பின்னர் ஆய்வு செய்ததில் அதில் உள்ள பொருள் அந்தக் காலத்து சீஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

நிச்சயம் மிகவும் சுவையானதாக இருக்கும் சீஸ் இதுவாக இருந்தாலும் உயிரைக் கொல்லும் நுண்ணுயிரிகள் நிறைந்திருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பழமையான உணவு பொருட்கள் குறித்து பகுப்பாய்வு வேதியியல் என்ற ஆய்விதழில் இந்தக் கண்டுபிடிப்பு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. இதை எழுதிய ஆராய்ச்சியார்கள், இந்த சீஸ் துண்டு அந்த சவப்பெட்டியில் இருப்பவர் உயிருடன் இருந்தபோது உண்ட உணவாக இருக்கலாம், அதற்காக சவப்பெட்டிக்குள் அது வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Archaeofood என்று அழைக்கப்படும் பழமையான உணவுப்பொருட்களை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பது தொல்லியல் ஆய்வில் ஒரு பிரிவாக விளங்குகிறது. இந்த சீஸ் அத்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. பழமையான சீஸ் அதிக சுவையுடன் இருக்கும் என்றாலும் உலகின் மிகப் பழமையான இது மிக ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போல, இந்த சீஸ் மருத்துவ பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் பழமையான காலத்தில் சீஸ் அழகுக்காகவும் மருத்துவ குணத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Sharing is caring!