“தென்னையில ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” – வடிவேலு ஸ்டைலில் எல்லா சின்னத்திலும் ஒரு குத்து..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சித் தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 31,245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், வடிவேலு பட காமெடி பாணியில் வாக்காளர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்ட போது, வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என சொல்வது போல, வாக்காளர் ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்திருந்தார்.

இதனால் அது செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!