மடகாஸ்கர் தீவு அருகே ஹெலிகொப்டர் விபத்து – 12 மணிநேரம் நீந்தி கரைசேர்ந்த அமைச்சர்.

மடகாஸ்கர் தீவு அருகே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானநிலையில் அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி கரையை அடைந்தார்.

ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு மடகாஸ்கர். மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் , 39 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

சரக்குகளை ஏற்றி செல்ல வேண்டிய அந்த கப்பலில் சட்டவிரோதமாக மக்களை ஏற்றி சென்றுள்ளனர். அதிக பாரம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, கடலில் சிக்கியவர்களை மீட்கும்நடவடிக்கையில் மடகாஸ்கர் மீட்புப்படை களமிறங்கியது. அப்போது புறப்பட்ட ஹெலிகொப்டரில் அந்நாட்டு அமைச்சர் கேலேவும் (Serge Gelle ) இருந்தார். இந்த ஹெலிகொப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இதையடுத்து கடலில் குதித்த கேலே 12 மணி நேரம் கடலில் நீந்தி அருகில் உள்ள மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘நான் திங்கள்கிழமை மாலை 7:30 மணிக்கு நீந்த ஆரம்பித்து, மறுநாள் காலை 7:30 மணி வரை நீந்தி இந்தத் தீவை அடைந்தேன். நான் இறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை’ என கேலே கூறியுள்ளார்.

ஹெலிகொப்டரில் பயணித்த மற்றொரு அதிகாரியும் உயிர் பிழைத்தார். அதேவேளையில், ஹெலிகொப்டரின் கப்டன் மற்றும் அதிகாரி ஒருவரின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அவர்களை தேடும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது

Sharing is caring!