அபிநந்தனை சித்திரவதை செய்த பாகிஸ்தான் ராணுவம்… தகவலால் பரபரப்பு

புதுடில்லி:
அபிநந்தன் பிடிப்பட்ட போது அவரை சித்திரவதை செய்துள்ளது பாகிஸ்தான் ராணுவம் என்று செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விமானப்படையின் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் சித்ரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்., 26ல், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் சென்று, பயங்கரவாத முகாம்களை, குண்டுகள் வீசி அழித்தன. மறுநாள், பாக்., போர் விமானங்கள், காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்தன.

அவற்றை, நம் விமானப்படை விமானங்கள் விரட்டி அடித்தன. அப்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாக்., விமானத்தை துரத்திச் சென்றதோடு, மிக் – 21 விமானம் மூலம், பாக்.,கின் எப் – 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இந்த நடவடிக்கையின் போது அபிநந்தன் சென்ற விமானம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது.

அபிநந்தனும், பாக்., ராணுவத்திடம் சிக்கினார். இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த நெருக்கடியால், 60 மணி நேரத்துக்கு பின், அபிநந்தனை, பாக்., விடுவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் அபிநந்தனுக்கு மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் சித்ரவதை அளிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாராசூட் மூலம் இறங்கிய போது இளைஞர்கள் தாக்கியதில் அபிநந்தனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் 24 மணி நேரம் அவருக்கு பாக்., ராணுவம் எந்த சிகிச்சையும் அளிக்காமல் நிற்க வைத்தே விசாரணை நடத்தி உள்ளது.

இந்திய போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், போர் தளவாட போக்குவரத்து, எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் நடவடிக்கைகள், இந்திய விமானப்படை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ரேடியோ அலை வரிசை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

அபிநந்தன் கேள்விகளுக்கு சாதுர்யமாக பதிலளித்ததால், ஸ்பீக்கர்களை காதுக்கு அருகில் அலற விட்டும், அவர் மீது நீரை பீய்ச்சி அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர். அடிக்கடி இடம் மாற்றி அவரை தூங்கவும் விடவில்லை. தலா 3 ராணுவ வீரர்கள் அடங்கிய 4 குழுக்கள் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

சர்வதேச நாடுகள் பாக்.,குக்கு அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்கு பின், அபிநந்தன் மீதான தங்களின் அணுகுமுறையை பாக்., மாற்றி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!