அமிதாப் பச்சனை மிஞ்சிய ‘தல’ அஜித்; கர்ஜிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ பட ட்ரைலர்!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் இந்தி ரீமேக் தான் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை – யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு – நீரவ்ஷா.

அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது.

‘ஆர் யு விர்ஜின்’ என்று அஜித் பேசும் வசனத்துடன் ஆரம்பிக்கிறது ட்ரைலர். ‘இந்த மாதிரி பொண்ணுகளுக்கெல்லாம் இந்த மாதிரி தான் நடக்கும்’ என்று பின்குரலில் ஒரு வாய்ஸ் கேட்க ‘ அப்படியெல்லாம் நடக்காது; நடக்கக்கூடாது’ என்று அஜித் கூறுவது, ‘ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என்பன போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வழக்கறிஞராக நடிகர் அஜித் கர்ஜிக்கிறார். ட்ரைலரை பார்க்கும் போது உண்மையாகவே இந்த கேரக்டரில் அஜித் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று கூறலாம். ஷ்ரத்தாவும், இந்தி பட டாப்ஸியின் கேரக்டரில் சற்றும் குறையாமல் நடித்திருப்பதாகவே தோன்றுகிறது. ரங்கராஜ் பாண்டேவும் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று தெரிகிறது. ‘தல’ அஜித்தின் முழு தரிசனத்தை காண ஆகஸ்ட் 10 வரைக்கும் பொறுத்திருப்போம்.

Sharing is caring!