அருண்ராஜா காமராஜுக்கு பிரகாசமான எதிர்காலம்

சிவகார்த்திகேயனின் நண்பர் என்ற விசிட்டிங் கார்டு அருண்ராஜா காமராஜுக்கு சினிமாத் துறையில் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. பாடலாசிரியராக அறிமுகமான அவர், குறுகிய காலத்திலேயே அனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன் முதலானோர் இசை அமைப்பில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றார்.

உச்சமாக, ரஜினி நடித்த கபாலி படத்தில் நெருப்புடா என்ற பாடலை எழுதும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதியதில்லை. அந்த குறையும் இப்போது தீர்ந்துவிட்டது.

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கி வரும் படம் ‘சர்வம் தாள மயம்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் அறிமுக பாடலான ‘பீட்டர் பீட் ஏத்து’ என்று துவங்கும் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். இந்த பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முதலாக இணைந்துள்ளார் அருண்ராஜா காமராஜ். மியூசிகல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘சர்வம் தாள மயம்’ விரைவில் வெளியாகிறது.

Sharing is caring!