அழகுமகன் வெளியீட்டால் உற்சாகத்தில் மாளவிகா

அழகும், திறமையும் இருந்தாலும் வாய்ப்பும், நேரமும் சினிமாவில் முக்கியம் என்பார்கள். அது மாளவிகா வாலசுக்கும் பொருந்தும். மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்தார். என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில், அவர் இயக்குனர் ராஜாவுக்கு ஜோடியாக நடித்தார்.

அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் அழகுமகன், அறுசுவை அரசன் என்ற இரு படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே தாமதமானது. இப்போது அழகுமகன் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக களம் இறங்கியிருக்கிறது. அழகுமகன் வெளியீட்டுக்காக காத்திருந்த மாளவிகா இப்போது உற்சாகமாகியுள்ளார்.

அவதார் மூவீஸ் மற்றும் தாருண் கிரியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளது. அர்ஜுன் உதய் என்ற புதுமுகம் மாளவிகா ஜோடியாக நடித்துள்ளார், இவர்கள் தவிர ராஜ்கபூர், சிங்கம்புலி, சேரன்ராஜ், ஜி.எம்.குமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அகு அஜ்மல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் அழகன் செல்வா கூறியதாவது:

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும், உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் படம். அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு தென்மாவட்ட மண்ணின் மகிமையையும், அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் தேனி, போடி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 3 ம் தேதி படம் வெளியாகிறது.

Sharing is caring!