அழாமல் இருப்பது போல நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா! கமல்

கடந்த வாரம் நாட்டாமைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்னை எதுவும் நடக்கவில்லை. அப்படியிருக்க பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை கமல் இதைப்பற்றி எல்லாம் பேச வேண்டும் என்று நாம் நினைத்தது எல்லாம் பேசினாரா?

நேற்றைய நிகழ்ச்சியை போட்டியாளர்களின் எமோஷனல் பக்கம் பற்றி பேசியப்படி தொடங்கி வைத்தார் கமல். இழந்ததை நினைத்து அழுபவர்கள், இருப்பதை காப்பாற்றிக் கொள்வார்களா என்றார். அதில் எத்தனை குறியீடுகளை ஆண்டவர் பக்தர்கள் கண்டுப்பிடித்தார்களோ..

பின் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துவிட்டது தானே என்று பார்வையாளர்களை நோக்கி கேட்டார். அதற்கு காரணம் மக்கள் எவிக்ஷனுக்காக வாக்களிக்க தொடங்கி இருப்பது என்றார். உண்மையில் அப்படி ஒன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமான கட்டத்தை எட்டிவிடவில்லை. ஆனால் இதைப்பற்றி கூறிக்கொண்டே, இப்படி தான் நாட்டிலும் வாக்களிப்பது மிக முக்கியம் என்றார். எப்படியாவது நூல் பிடித்த விஷயத்துக்கு வந்துட்றாரு..

வழக்கம் போல பார்வையாளர்கள் சில கேள்விகளை கமலிடம் கேட்டனர். ஒருவர் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் எப்படி இருப்பீர்கள், குறும்படம் எல்லாம் போட்றாங்க என்று கேட்டார். இந்த கேள்வியை யார் யாரிடம் கேட்டாலும் நான் நானாக தான் இருப்பேன் என்று தான் பதிலளிப்பார்கள். கமலும் அப்படியே தான் கூறினார். என்ன பேசினாலும் அந்த இடத்தில் இருந்தால் தான் தெரியும்.

அடுத்து, பொன்னம்பலம் வடபழனி பக்கம் சுத்திட்டு இருக்கார்னு நிறைய பேர் சொன்னாங்க அதெல்லாம் உண்மையா என்று ஒருவர் கேட்டார். இதனை லீடாக வைத்து கர்நாடக சிறை பற்றியெல்லாம் கமல் பேசுவாரு என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சியது. வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை ஏமாற்றம் சுகமானது.

19வது நாள் தொடர்ச்சியில் அனந்தும் பொன்னம்பலமும் பேசி கொண்டு இருந்தார்கள். பொன்னம்பலத்திடம் பசிக்குதா என்று அனந்த் கேட்டதற்கு, நாங்க என்ன சோத்துக்கு அலையிரோமா என்று கேட்டுள்ளார். சபையில் இது போன்று பேசியது தவறு என்று அனந்த் கூறினார். அதனை பொன்னம்பலம் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று மற்றொரு சேனலில் நாட்டாமை படம் போட்டிருந்தார்கள். அதனை பார்த்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ந்திருந்தால் அந்த உரையாடல் இன்னும் வைட்டாக தெரிந்திருக்கும்.

20வது நாள் காலையில் ஒலித்த பாடலுக்கு குரூப் டேன்ஸ் ஆடினார்கள் போட்டியாளர்கள். அதில் ஐஸ்வர்யா தான் ஹிட். அன்புடன் டாஸ்க்கில் தனது தந்தையை பற்றி பேசியதுகுறித்து  பாலாஜியிடம் பேசிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. அவர் பேசியது தனது மகளை நியாபகப்படுத்தியதாக கூறினார் பாலாஜி. அந்தடாஸ்க்கில் பாலாஜி பேசியதும் நித்யா மீண்டும் வந்து பேசியது தவறு என்று அனந்த் ஜனனியிடம் கூறிக்கொண்டு இருந்தார். பாலாஜி தான் உண்மையாக இருக்கிறார் என்பது அவரது கருத்து.

மகத் அந்த வீட்டில் செய்யும் சேட்டைகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக பொன்னம்பலமும் சென்றாயனும் பேசிக்கொண்டு இருந்தனர். நம்ம வீட்டுல மனைவிகிட்ட பேசவே நாம யோசிப்போம், இந்த பையன் வெளியே கேர்ள் பிரெண்ட வெச்சிட்டு உள்ள இப்படி பண்ணிட்டு இருக்கான் என்பது போல பேசினார் பொன்னம்பலம். மகத் செய்யும் விஷயங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன தான் என்றாலும் பொன்னம்பலம் எதை நினைத்து சொல்கிறார் என்று டீப்பாக யோசித்தால் மகத் பக்கம் சாய்வது தான் சரியாக இருக்கும்.  அதற்கு காரணம் பின்னால் பார்ப்போம்.

ரித்விகா அடுத்த வாரம் யார் யார் நாமினேட் ஆவார்கள் என்று கணித்துக்கூறிக்கொண்டு இருந்தார். சென்ற சீசனை பார்த்து பார்த்து தன்னை தயார்படுத்திக்கொண்டு தான் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்திருக்கிறார் போல. ஐஸ்வர்யா அடுத்த வாரம் நாமினேட் ஆகி மக்களின் அமோக ஆதரவு பெறுவார் என்றார். அவரும் ஐஸ்வர்யாவுக்கு ஓவியா ரோலை தான் கொடுத்திருக்கிறார்.

இதெல்லாம் நடக்க அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேசினார் கமல். போட்டியாளர்களுக்கு கருப்பு, சிவப்பு ரோஜாக்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கு பிடித்தவருக்கு சிவப்பு ரோஜாவையும், ஒத்துப்போகாதவர்களுக்கு சிவப்பு ரோஜாவும் கொடுக்க வேண்டும்.

இதில் அதிகமான சிவப்பு ரோஜாக்கள் நித்யாவுக்கு கிடைத்தது. பாலாஜியும் அவருக்கு ரோஜாவை கொடுத்திருந்தார். அதிகமான கருப்பு ரோஜாவை பெற்றார் வைஷ்ணவி. அடுத்ததாக ஷாரிக்கிற்கு கருப்பு ரோஜாக்கள் கிடைத்தது. அவர் மீது இருக்கும் தவறை யாரும் நேரடியாக சொல்ல விரும்பவில்லை. கமலும் நிறைய முயற்சித்தார் போட்டியாளர்ளை உடைத்து பேச வைப்பதற்காக. ஆனால் முடியவில்லை. ரித்விகாவிற்கு எந்த ரோஜாவும் கிடைக்கவில்லை. தன்னிடம் ரோஜாஇருந்தால் நான் தந்திருப்பேன் என்றார் கமல்.
சிவப்பு ரோஜாக்களை விட கருப்பு ரோஜாக்களுக்கு பலம் அதிகம். அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்று கூறினார் கமல். உண்மைதான். கருப்பு ரோஜாக்களை பெற்றவர்கள் தான் தங்களையும் மீறி கேமரா முன் உண்மையான இயல்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது சிலருக்கு கோபத்தையும் உண்டாக்கி இருக்கலாம். இது ஒருபுறம் இருக்க மகத்துக்கு ஒருவர் கூட கருப்பு ரோஜாவை கொடுக்கவில்லை. வீட்டில் அதிகமாக சண்டை போடு வது அவர் தான். அல்லது நமக்கு அவர் சண்டைபோடுவதாக தான் காட்டுகிறார்கள். ஆனால் அவருக்கு இரண்டு சிவப்பு ரோஜாக்கள் கிடைத்தன. நமக்கு காட்டப்படும் 1.30 மணி நேர நிகழ்ச்சியையும் தாண்டி உள்ளே நடப்பது நமக்கு தெரியாது. எனவே போக போக மகத்தை பற்றி புரிந்து கொள்ளலாம்.

அனந்த் வைத்தியநாதன் தனது சிவப்பு ரோஜாவை ரம்யாவிற்கு கொடுத்தார். அதற்கு அவர் கூறிய காரணங்களும் அழகாக இருந்தது. ரம்யா போல தான்வாழ நினைப்பதாக கூறினார் அனந்த்.

பின் கடந்த 3 வாரங்களில் தலைவிகளாக இருந்த 3 பெண்களை  தலைமை பொறுப்புப்படி பட்டியலிட்டனர் போட்டியாளர்கள். அவர்கள் கருத்துப்படி முதல் இடத்தை ஜனனி பிடித்தார். அடுத்தடுத்த இடாத்தில் வைஷ்ணவியும், நித்யாவும் இருந்தனர்.
ஆனால் பிக்பாஸ் கணக்கு வேறாக இருந்தது. அவரை பொறுத்தவரை முதல் இடம் வைஷ்ணவிக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த இடங்கள் நித்யா மற்றும் ஜனனிக்கு கொடுக்கப்பட்டது. இது சரியானதும் கூட. . வைஷ்ணவி தலைவியாகிவிட்டார் என்பதற்காகவே அவர் மீது அதிகமான பழிகளையும் அழுத்தத்தையும் போட்டனர் போட்டியாளர்கள். அதையெல்லாம் சமாளித்து திடமாக இருந்தார் வைஷ்ணவி.
அந்த மூன்று தலைவிகளும் வீட்டில் ஒத்துழைக்காமல் இருந்த நபராக மும்தாஜை கூறினர். ரெபில் மும்தாஜ் அதனை ஏற்றுக்கொண்டார். பின் சிறந்த டீம் பிளேயராக ரித்விகாவை தேர்வு செய்தனர்.

போட்டியாளர்கள் மற்றவர்களின் திட்டம் என கூறியதில் சிலவற்றை குறித்து கேட்டார் கமல். அதில் அனந்த்தின் கருத்து மிக கச்சிதமாக இருந்தது. டேனி இந்த போட்டியை வெல்வதற்கான முழு திறமையையும் கொண்டு இருப்பதாக அவர் கூறினார். பின் பொன்னம்பலம் ஐஸ்வர்யா பற்றி தான் கூறியதை கூறினார். வெற்றி பெற எதையும் இழக்க தயார் என்ற எண்ணத்துடன் அவர் வந்திருக்கிறார் என்றார். அவங்க வளர்ந்த சூழல் அப்படி என்று ஒரு மனிதரின் எல்லா தவறுகளை கடந்து சென்று விட முடியாது. அது போல தான் பொன்னம்பலத்தின் பேச்சுக்களும். ஐஸ்வர்யா எதையும் இழக்க தயாராக இருக்கிறார் என்பதில் பல அர்த்தங்கள்இருக்கிறது. இதுவே முன்னர் மகத் பக்கம் நிற்கலாம் என்று கூறியதற்கு காரணம்.

பொன்னம்பலத்தின் கருத்தை மறுத்த அனந்த், ஐஸ்வர்யா தனது உழைப்பால் மட்டுமேமுன்னரே நினைப்பவர் என்று கூறினார். இதனையே மும்தாஜும் ஆமோதித்து பேசினார்.

ஷாரிக்கிடம் முதல் வாரத்தில் இருந்த பாசம் இப்போது இல்லையா என்று மும்தாஜிடம் கேட்டார் கமல். அவர் செய்வது சிலவற்றை பார்க்கும் போது நம்ம பையன் வளர்ந்துட்டான் என்று நினைத்துக்கொள்வதாக மும்தாஜ் கூறினார். பின் ஷாரிக்கிற்கு அவர் கொடுத்த அறிவுரைகளும் சரியானதாக தான் இருந்தது. ஆனால் அதை ஷாரிக் எப்படி எடுத்துக்கொண்டார் என்பது தான் பெரிய கேள்வி.

பின் நேற்று முன்தினம் நடந்த அன்புடன் டாஸ்க் பற்றி பேசினார்கள். டேனி மீண்டும் அழ 16  பேரோடு சேர்த்து நானும் உங்களுக்கு தந்தை போல தான் என்றார் கமல். பாலாஜியிடம் ஏற்பட்ட மாற்றங்களுக்காக கமல் நன்றி தெரிவித்து பேசிய போது ஐஸ்வர்யா அழுதார்.
இப்போது அவர் வாழும் வாழ்க்கைகாக தனது குடும்பத்தை இழந்து விட்டதாக கூறினார். ஐஸ்வர்யா பேசுவதை புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும் அதைக்கேட்கும் போது கண்கலங்கி விடுவது உண்மைதான். கமலும் உணர்ச்சிவசப்பட்டு நீங்க குழந்தை இல்ல தாய் என்றார்.
ஒவ்வொரு வாரமும் கமலை போட்டியாளர்கள் எப்படியோ அழ வைத்து விடுகிறார்கள். அழாமல் இருப்பது போல நடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக கூறினார் கமல்.

பின் இந்த வார எவிக்ஷனில் தொடர்ந்து 3வது முறையாக நாமினேட் செய்யப்பட்ட மும்தாஜ் அதிக வாக்குகள் பெற்று எஸ்கேப் ஆகிவிட்டதாக கமல் அறிவித்தார். மீதம் இருப்பது அனந்த், நித்யா, பாலாஜி, பொன்னம்பலம். இவர்களில் யார் வெளியேறுவர்கள் என்பதை நாளை சொல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினர் நமது அவர். ம்ம்.. நாம் எதிர்பார்த்ததை பற்றி நேற்றும்  பேசவில்லை. இன்றாவது பேசுவாரா ?பார்ப்போம்..

Sharing is caring!